"நல்ல நண்பர்கள் கடவுள் தந்த பரிசு,' "நல்ல பெற்றோர்கள் கடவுளாக வந்த பரிசு' என்பது ஆன்றோர் வாக்கு. குப்பனும் குணசீலனும் நண்பர்கள். வாரம் ஒருமுறை இருவரும் சந்தித்து, மனம் விட்டுப்பேசி கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வார்கள். குப்பன் அனுதினமும் காவிரியில் நீராடி ஈசனைத் தொழுதபின்தான் மற்ற காரியங்களில் ஈடுபடுவார். அது மன்னராட்சிக் காலம்.

Advertisment

ஒருநாள் வழக்கமாக நண்பர்கள் சந்தித்தனர். அப்போது குணசீலனின் முகத்திலும் உடலி−லும் இருந்த காயங்களைப் பார்த்துப் பதறிய குப்பன், ""என்னாயிற்று'' என்று காரணம் கேட்டார்.

es

அதற்கு குணசீலன் மிகுந்த வருத்தத்துடன், ""மன்னர் ஒரு போட்டி வைத்திருக்கிறார். அதில் கலந்துகொண்டு வெற்றி பெறவேண்டும் என்ற வேட்கையுடன் சென்றேன். ஆனால் தோல்விதான் கிட்டியது. அந்த துன்பமே என்னை மிக வாட்டுகிறது'' என்றார்.

Advertisment

அதைக்கேட்ட குப்பன், ""குணசீலா... துன்பங்களை ஆத்யாதமிகம், ஆதிபௌதீகம், ஆதிதைவிகம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். தலைவலி−, ஜலதோஷம், காமம், கோபம், பயம் போன்ற துன்பங்கள் ஆத்யாதமிகம். மிருகம், பறவை, மனிதர் போன்றவற்றால் வரும் துன்பம் ஆதிபௌதீகம். குளிர், காற்று, வெப்பம், மழை முதலி−யவற்றால் வரும் துன்பம் ஆதிதைவிகம் ஆகும். பகவானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை எவ்வித துன்பங்களும் அணுகாது.

சரி; போட்டியில் நான் கலந்து கொள்கிறேன்'' என்று சொல்லி−ப் புறப்பட்டார்.

குப்பன் அங்கு சென்று பார்த்த போது, பெரும் வீரன் ஒருவன் இடது காலி−ல் சங்கிலி−யைக் கட்டிக்கொண்டு தோரணவாயி−ல் நின்றிருந்தான். சங்கி−யின் மறுமுனை அப்படியே மேலாகப் போய் வாயி−ன்மேலே தோரணம் போலத் தொங்கவிடப்பட்டிருந்தது. காரணம்...

யாராவது உள்ளே செல்ல வேண்டுமானால் அந்த வீரனை வென்றுவிட்டுச் செல்லவேண்டும் அல்லது அந்த சங்கிலி−க்குக்கீழ் நுழைந்து செல்லவேண்டும். அனை வரும் சங்கி−க்குக் கீழாகத் தான் நுழைந்து போய்க்கொண்டிருந் தார்கள்.

Advertisment

ess

வீரரான குப்பனோ சங்கிலி−க்குக் கீழே நுழைந்துபோக விரும்ப வில்லை. எனவே கா−ல் சங்கிலி− கட்டிய வீரனுடன் மற்போர் செய்து, அவனைக் குப்புறத்தள்ளி வெற்றி கொண்டார்.

அதன்பிறகு அரங்கத்தில் நுழைந்த குப்பன், அரசர் இருக்கும் மண்டபத்தில் புகுந்து அரசரைக் கண்டார். குப்பன் வந்த நோக்கத்தை உணர்ந்த அரசர், ""வீரனே! ஒரு குதிரை இருக்கிறது. அதன்மேல் ஏறி சவாரி செய்து வந்தால், நீ வெற்றி பெற்றதாக ஒப்புக்கொள்வேன்; பரிசுகளும் வழங்குவேன்'' என்றார்.

அந்தக் குதிரை மிகவும் கொடியது; தன்மீது ஆள் ஏறியவுடன், விரைந்துபோய் அருகிலுள்ள குளத்தில் தள்ளி, மிதித்துத் துவைக்கும் என்பதை குப்பன் அறிந்துகொண்டார்.

குதிரையைக் கொணர்ந்து குப்பன் முன்னால் நிறுத்தினார் கள். அதை ஒருமுறை வலம்வந்து பார்த்துக்கொண்ட குப்பன், ஒரு சாக்குப்பை நிறைய சுண்ணாம்புக் கற்களை கொண்டுவரச் செய்து, அதை குதிரையின் அடிவயிற்றில் நன்றாகக் கட்டினார். பின்னர் குதிரைமீது குப்பன் தாவி ஏறியதும், அது தன் வழக்கப்படி சிட்டாகப் பறத்து குளத்தில் இறங்கியது. அப்போது அதன் அடிவயிற்றில் கட்டப்பட்டிருந்த சுண்ணாம்புக்கற்கள் தண்ணீர் பட்டுக் கொதிக்கத் தொடங்கின.

அக்கொதிப் பைத் தாங்க முடியாத குதிரை உயிர்பயத்தில் கரையேறி வெறிபிடித்தாற்போல் ஓடத்தொடங்கியது. சற்றுநேரம் அவ்வாறு ஓடியதும், அதன் அடிவயிற்றில் கட்டப்பட்டிருந்த சாக்குப் பையை அவிழ்த்துவிட்டார் குப்பன்.

குதிரைக்கு மெல்லமெல்ல கொதிப்பு அடங்கத் தொடங்கியது. உயிர்பயத்தில் ஊர் சுற்றிய குதிரைக்கு படபடப்பு அடங்கியது. தன்மேல் இருப்பவர் தனக்கு ஏதோ நன்மை செய்கிறார் என்று நினைத்தது. பலமிழந்த அந்நிலையில் அக்குதிரை குப்பனைச் சுமந்தபடி அமைதியாக வந்து அரசரின்முன் நின்றது. மக்கள் மட்டுமல்ல; மன்னரும் வியந்தார். அரங்கமே எழுந்து நின்று குப்பனைப் பாராட்டியது. அரசர் ஏராளமான வெகுமதிகளைத் தந்து குப்பனைப் பெருமைப்படுத்தினார்.

சாதனை செய்யவேண்டும்; பேரும்புகழும் பெறவேண்டும் என்ற எண்ணம் எல்லாருக் குமே உண்டு. ஆனால் அந்த எண்ணம் குணசீலனுக்கு ப−லிக்கவில்லையே, ஏன்?

ஒரு செயலைச் செய்வதற்குமுன் அதைப்பற்றி நன்கு அறியவேண்டும்; சாதக- பாதகங்களை அலசிப்பார்க்கவேண்டும்.

esa

அதன்பின் நம்பிக்கையுடன் துணிச்சலோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்; பேரும் புகழும் தாமே வரும். அத்தகைய வெற்றியை யும் புகழையும் தரவல்லிலதொரு அற்புதத் திருத்தலம்தான் தேரெழுந்தூர் வேதபுரீஸ் வரர் திருக்கோவில்.

இறைவன்: வேத புரீஸ்வரர்.

இறைவி: சவுந்திராம் பிகை, சௌந்தர நாயகி.

புராணப் பெயர்: திருவழுந்தூர்.

ஊர்: தேரெழுந்தூர்.

விசேஷ மூர்த்தி: ஞானசம்பந்த விநாயகர்.

தல விருட்சம்: வெண் சந்தனமரம், வில்வமரம்.

தீர்த்தம்: வேதாமிர்த தீர்த்தம்.

சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், அப்பர், சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 38-ஆவதாகத் திகழ்கின்றதும், காவிரி, வேதங்கள், தேவர்கள், அகத்தியர், அஷ்டதிக் பாலகர்கள் வழிபட்டுப் பேறு பெற்றதுமான இத்தலம் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

"வானே மலையே யெனமன் னுயிரே

தானே தொழுவார் தொழுதாள் மணியே

ஆனே சிவனே யழுந்தை யவரெம்

மானே எனமா மடமன் னினையே.'

-திருஞானசம்பந்தர்

தலப்பெயர்

தேரழுந்தூர் என்பது ஊரின் பெயர். ஊர்த்துவ ரதன் என்ற மன்னனின் ஆட்சிக் குட்பட்ட தேசங்கள் பரவலாக இருந்ததால், வானத் தேர்மூலம் பறந்து அரசியல் அலுவல் களை கவனித்து வந்தான். அப்படி ஒரு சமயம் அவன் பறந்து சென்றபோது, அந்த வானத்தேரின் நிழல் வேதபுரீஸ்வரர் எழுந் தருளியிருக்கும் சந்தனாரண்யம்மீது படவே, அங்கு தவம்செய்த அகத்தியரின் மகிமையால் அந்த ரதம் கீழே இறங்கி அழுந்திவிட்டதாம். எனவே இத்தலத்திற்கு தேர்+அழுந்தூர் தேரழுந்தூர் என்று பெயர் வந்தது. நாளடைவில் மருவி தேரெழுந்தூர் ஆனது.

தல வரலாறு

ஒருமுறை பார்வதியை நடுவராக வைத்து பரமேஸ்வரனும் மகா விஷ்ணுவும் சொக்கட்டான் ஆட்டம் ஆடினர். ஒரு கட்டத்தில் பகடைக்காய் உருட்டுகையில் விழுந்த எண்ணிக்கையில் இருவருக் கும் சந்தேகம் வர, நடுவராக இருந்த பார்வதி அம்மை ஈஸ்வரனைக் குறைசொல்ல, ஈஸ்வரன் வெகுண்டு பார்வதிதேவியை "பசுவாகப் போகக்கடவது' என சபித்தார்.

தன்னால் ஏற்பட்ட சாபத்திற்காகப் பெருமாள் மாட்டிடையராக வடிவெடுத்து அப்பசுவைப் பாது காக்கும் பொறுப்பை ஏற்றார். எனவே இவ்வூரிலுள்ள பெருமாளுக்கு ஆமருவியப்பன், கோசகன் என பெயர் வழங்கிவருகிறது. அத்துடன் தேவி பல தலங்களில் சென்று வழிபட்டு, கடைசியில் இவ்வூரிலுள்ள ஈஸ்வரனை வழிபட்டு அழகிய உருவம் பெற்றதால், தேவிக்கு இவ்வாலயத்தில் சௌந்தர நாயகி என்ற பெயர் வழங்கிவருகிறது.

பார்வதியைப் பசுவாக சபித்த ஈஸ்வரன் பிரிவாற்றமையால் இந்த சந்தனாரண்யத்துக்கு வந்து வேதியர்களுக்கு வேதம் பயிற்று வித்தபடியால், இத்தல ஈஸ்வரனுக்கு வேதபுரீஸ்வரர் என்று பெயர் வழங்கலாயிற்று.

சிவனும் சக்தியும் பிரிந்திருந்த காலத் தில் உலகில் ஜீவவாழ்க்கை ஜடவாழ்வு போல மாறி மாட்சி குறைய லாயிற்று. இந்த விபரீதத்தைக் கண்டு மருண்ட இந்திரன் முதலான தேவர்கள், தங்கள் தலைவனான சங்கு கர்ணனிடம் விவரமறிந்து சந்தனாரண்யத்துக்கு வரவும், நந்திகேஸ்வரர் ஈஸ்வரனைச் சந்திக்க அவர்களை அனுமதிக்க வில்லை. எனவே அக்னிதேவனும், தர்மதேவனும், அஷ்டதிக் பாலகர் களும் சந்தனாரண்யத்திலேயே தங்கி ஆளுக்கொரு சிவலி−ங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடலாயினர்.

இதனால் இவ்வூரைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் பல சிவலி−ங்கங்கள் இன்றும் காணப்படுகின்றன. மேலும் தேவகணங்கள் வந்து தங்கியதால் இவ்வூர் ஆன்மிக சிறப்புமிக்க ஊராக சிறந்து விளங்கிவருகிறது.

அருஞானம் வல்லார ழுந்தை மறையோர்

பெருஞான முடைப்பெரு மானவனைத்

திருஞானசம் பந்தன் செந்தமிழ்கள்

உருஞானமுன் டாமுணர்ந் தார் தமக்கே.

சிறப்பம்சங்கள்

=கவிச்சக்ரவர்த்தி கம்பன் பிறந்த இவ்வூரின் பிரதான சாலையில் நின்று மேற்குப்புறம் பார்த்தால் கிழக்கு நோக்கிய பெருமாள் கோவிலும், கிழக்குப் புறம் பார்த்தால் மேற்கு நோக்கிய சிவாலயமும் உள்ளது சிறப்பான ஒன்று.

=ஞானசம்பந்தர் குழந்தையாக இவ்வூருக்கு வருகை தந்தபோது, கிழக்கிலும் மேற்கிலும் இருபுறமும் வானுயர்ந்து நின்ற கோபுரங்களைப் பார்த்தவுடன் திருஞானசம்பந்த மூர்த்திக்கே ஒரு சந்தேகம் எழுந்தது. இறைவனையே சுட்டிக்காட்டிய ஞானக் குழந்தைக்கு சாலையோரத்திலுள்ள விநாயகப் பெருமான், "அதோ, ஈஸ்வரன் கோவில்' என வழிகாட்டினார். எனவே இவ்விநாயகர் ஞானசம்பந்த விநாயகர் எனப் பெயர் பெற்றார்.

இங்கு இவர் அமர்ந்திருந்து வரும் சேவார்த்தி களுக்கு இன்றும் வழிகாட்டிக் கொண்டிருக் கிறார்.

=காவிரிக்கும், அகத்தியருக்கும் இங்கு சாபவிமோசனம் கிடைத்ததால் இருவருக்கும் தனித்தனியே சந்நிதிகள் உள்ளன.

=ஈசன் மேற்கு நோக்கி சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ள இத்தலத்தில் மாசிமாதம் 23, 24, 25 தேதிகளில் மாலை 5.30 மணிக்குமேல் 6.05 மணிக்குள் சூரிய பூஜை நடப்பது மிகவும் பிரசித்திபெற்ற ஒன்று.

=மாசிமாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று இத்தலப் பெருமாள் இவ்வூர்க் கோடியில் இராமவதாரமாக எழுந்த ருள, வேதபுரீஸ்வரர் மேற்படி காட்சி கொடுக்கும் மாசி புனர்வசு விழா வெகுவிமரிசையாக நடப்பது பார்க்கச் சிறந்தது.

=கற்கசன் என்ற திருடனை சேவகர்கள் பிடித்து அரசனிடம் இழுத்துச் சென்றனர். அன்று சோமவாரமாக இருந்த காரணத்தால் வேதபுரீஸ்வர சுவாமி திருக்கோவில் சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தீப ஆரத்தி நடந்து கொண்டிருந்தது. எங்கும் "ஹரஹர' எனவும் ஒலிலி−த்துக்கொண்டிருந்தது. இந்த ஒலி− கற்கசன் காதில் விழுந்த காரணத் தால், அந்த ஒலி−யிலேயே லயித்து சமாதி நிலையை அடைந்துவிட்டான். இதையறி யாத சேவகர்கள் கற்கசனை மிகவும் துன்புறுத்தினர். எமதூதர்கள் அவன் உயிரைக் கொண்டுசெல்ல காலபாசத்தோடு வந்திருந்தனர். சிவ தூதர்கள் உடன்தோன்றி, "அவன் மரிக்கும்போது வேதபுரீஸ்வரரைத் தியானித்துவிட்டான். ஆகவே அவனைக் கயிலை அழைத்துச் செல்ல வேண்டும்' என்று சொல்லி− அழைத்துச் சென்றனர். எனவே திங்கட்கிழமையன்று வேதபுரீஸ்வரரை தொழுவது சாலச் சிறந்தது

=பிறர் போற்றும்வண்ணம் தான் அழகாக இருக்கவேண்டுமென்று விரும்புபவர் கள் இத்தல அம்பாள் சௌந்தர நாயகியை வழிபட, அவர்களுக்கு அம்பாளின் அருளாசி கிட்டும்.

=திரிபுவன சக்ரவர்த்தி என்று புகழப்படும் மூன்றாம் குலோத்துங்க சோழன் இவ்வூர் வேதபுரீஸ்வரரை வழுத்தி நிவந்தங்கள் ஏற்படுத்திச் சென்றதாக தலபுராணம் சொல்கிறது. மேலும் இவ்வாலயத்தின் பல இடங்களில் சோழ அரசர்களான திரிபுவன தேவர், குலோத்துங்க சோழன், ராஜராஜ சோழன், வீரராஜேந்திர சோழன், ராஜராஜ கேசரிவர்மன், பாண்டிய அரசனான குலசேகர தேவன் ஆகியோரது செயல்களும், தர்மங்களும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

=தினசரி நான்குகால பூஜை நடக்கும் இத்தலத்தில் சித்ரா பௌர்ணமிக்கு பத்துநாட்கள் முன்னதாகக் கொடியேற்றம் செய்து தேர்த் திருவிழாவுடன் நிறைவு பெறுவது விசேஷமான ஒன்று.

""திருமணத்தடை, வம்பு, வழக்கு, வீண் அவப்பெயர் போன்ற பல்வேறு காரணங்களால் மன உளைச்சலுடன் வாழ்பவர்கள் திங்கட்கிழமையன்று முறையாக வழிபாடுகள் மேற்கொண்டால், அவற்றி −ருந்து நீங்கி அவர்களது இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். அவ்வாறு பயனடைந்தவர்கள் மறுபடியும் மனநிறைவுடன் வந்து வழிபாடு செய்வதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகர் ராஜ்மோகன் சிவம் குருக்கள்.

மகாமண்டபத்தில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன்கூடிய சொக்கட்டான் மண்டபத்தில் சிவனும் பெருமாளும் சொக்கட்டான் விளையாடு வதுபோன்று ஓவியங்கள் உள்ளன. சிவாகம விதிப்படி கோஷ்ட தெய்வங்கள் முறையாக உள்ளன. முருகன், வள்ளி, தெய்வானை, சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. ஈசான்ய திக்கில் நவகிரகங்கள், சொர்ண பைரவர், காலபைரவர் அருள்புரிகின்றனர்.

இருபக்கமும் இரண்டு பெருங்கோபுரங்கள் மற்றும் இரு புஷ்கரணிகள்என இங்கு வரும் ஆன்மிகத் தொண்டர்களை அதிசயிக்க வைக்கும் தெய்வீக மணம் கமழ்கின்ற ஆலயமாம்- வேதியர்களுக்கு வேதம் பயில்வித்த ஈசன் உறைகின்ற தலமாம்- தன் வாழ்வின் அழகை பிறர் ரசிக்க அருள்கின்ற அம்பாள் சௌந்தர நாயகி அருள்கின்ற தலமாம்- சுயம்புவாகத் தோன்றி சுயமரியாதையுடன் வாழ்விப்பதோடு தேனினும் இனிய வாழ்வைத் தந்தருளும் வேதபுரீஸ்வரர் குடிகொண்டுள்ள தேரெழுந்தூர் தலத்தை திங்கள் தினத்தன்று தொழுவோம். விசேஷ சேமங்களுடன் வாழ்வோம்.

காலை 6.30 மணிமுதல் பகல் 11.30 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.

ஆலயத்தொடர்புக்கு: ராஜ்மோகன்சிவம் குருக்கள். அ/மி வேதபுரீஸ்வரர் திருக்கோவில், தேரெழுந்தூர் (அஞ்சல்), குத்தாலம் வட்டம், நாகை மாவட்டம்-609 808. அலைபேசி: 98421 53947, 94864 57103.

அமைவிடம்: மயிலாடுதுறை- கும்பகோணம் நெடுஞ்சாலையில் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தேரெழுந்தூர். நகரப் பேருந்து, புறநகர்ப் பேருந்து வசதிகள் உள்ளன.